குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க 5 யஜ்ஞம் How To Make Family Quotes
குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க 5 யஜ்ஞம்
How To Make Family
Quotes
1) உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
(பூத யஜ்ஞ ம்) :
குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க அக்கம்பக்கத்தில் இருக்கும் உயிர்கள் நம்மை வாழ்த்தும்படியாக நாம் வாழ வேண்டும். எறும்புக்கு அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பாறைக்கல்லை இடித்த கல் பொடியையோ, பிளாஸ்டிக் கோலத்தையோ எறும்பினால் தின்ன முடியாது. மாக்கோலத்தை மங்களகரமாக இட்டு எறும்புகளும் நம்மை வாழ்த்தும்படி அனுபவித்து உணர்ந்த குடும்பங்கள் பல உண்டு.
துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும், உயிர்க்குல வழிபாடு ஆகும். வீட்டு வாசலுக்கு நேரே நடுவீட்டில் துளசி மாடம் இருக்க வேண்டும். துளசிச் செடியின் செழுமையைப் பார்த்தே பிறர் நம் வீட்டில் உள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்வார்கள். ஊர்க்கோடியில் இருக்கும் அரசமரத்திற்கு நீர் ஊற்றுவதும் இவ்வகையினது தான். தினமும் காக்கைக்குச் சோறு வைத்து பிறகு குடும்பத்தினர் தாங்கள் உண்ணும் நல்ல வழக்கம் பல குடும்பங்களில் இன்றும் எஞ்சி இருக்கிறது.
"யாவர்க்குமாம், பசுவுக்கொரு வாயுறை'' என்று திருமந்திரம் கூறுகிறது. இன்றும் பல கோவில்களில் பசு மாட்டுக்கு அகத்திக் கீரையோ, புல்கட்டோ வாங்கிப் போடும் வழக்கம் உள்ளது. இச்செயல்கள் உயிர்க்குலம் முழுவதையும் நாம் போற்றுவோம் என்பதற்க அடையாளமாகிய சில செயல்களே ஆகும். வீட்டில் வளர்ப்புப் பிராணியோ, பசுமாடோ இருந்தால் வீட்டில் உள்ளோர் அனாவசியமாக இரவில் வீட்டுக்கு வெளியே தங்கும் வழக்கம் ஏற்படாது.
ஆகவே உயிர்க்குலத்தைப் போற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு அடிகோலும். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணவன் மனைவி ஒரு குருநாதரிடம் போய் கேட்டார்கள். "எங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட என்ன வழி?'' குருநாதர் கூறினார். "நீங்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது பொருள் ஒன்றை மனமாற நேசியுங்கள். உங்களுக்குள் அன்பு பிறந்து விடும்." பூத யஜ்ஞம் என்னும் உயிர்களிடத்தில் அன்பு செய்யும் செயல் குடும்ப ஒற்றுமைக்குப் பேருதவி செய்யும்.
2) நர யக்ஞம் (மானுட சேவை):
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தங்களால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்கிற போது அவர்களுடைய வாழ்த்துக்கள் நம் குடும்பத்தை வாழ வைக்கும். பொதுக் காரியங்களில் குடும்பத்தினர் எல்லாரும் மனமுவந்து ஈடுபட வேண்டும். ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் முதலிய பொதுக் காரியங்களிலும், பள்ளிக்கூட விழா, உறவினர் திருமணம், புதுவீடு புகுதல் ஆகியவற்றிலும் குடும்பத்துடன் சென்று வாழ்த்த வேண்டும்.
குழந்தைகளையும் தங்களுடன் கட்டாயம் அழைத்துப் போக வேண்டும். இதனால் சிறுசிறு துன்பங்களையும், அசௌகரியங்களையும் தாங்கிக் கொள்ளும் சக்தி குடும்பத்திற்கு கிடைக்கும். நம் மகிழ்ச்சியை அக்கம் பக்கத்தவரோடு பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சி இரண்டு பங்கு ஆகிறது. பிறர் துயரத்தை நாம் பகிர்ந்து கெள்ளும் போது துன்பம் பாதியாகக் குறைகிறது. பண்பாடு என்பதே அதிர்ச்சிகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் சக்தி தான் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
ஊரில் பலர் சேர்ந்து செய்யும் நல்ல காரியம் எதுவாக இருந்தாலும் அதில் நம் பொருள் உதவியோ, உடல் உழைப்போ, வேறு ஏதாவது ஒரு விதத்தில் பங்கேற்போ இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு துன்பமும், இடையூறும் வரும்போது நமக்கு ஆறுதல் கூற நண்பர்கள் இருப்பார்கள். ஒரு ஊரில் பெரியசாமி என்ற பணக்காரர் இருந்தார். ஊரில் நடக்கும் திருமணம், கோவில் திருவிழாக்கள், புதுவீடு புகுதல், இளைஞர்கள் வாலிபால் குழு, பாலர்பள்ளி விழா, பள்ளிக்கூட சுதந்திர தின விழா எதற்கும் அவர் போக மாட்டார். பெருமையுடன் தன்னுடைய அடையாளச் சின்னமாக தன் கைத்தடியை அங்கே வேலைக்காரன் மூலம் அனுப்பி வைப்பார். கடைசியில் பெரியசாமி இறக்கும் காலமும் வந்தது. ஊரார் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. ஐம்பது கைத்தடிகள் மட்டும் அவர் வீட்டில் வந்து குவிந்தன. இப்படியா மனிதன் வாழ்வது?
நம் குழந்தைகளை நிறைய மனித உறவுகள் கொண்ட மனிதர்களாக வளர்ப்பதே மிகப்பெரிய செல்வம் ஆகும். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “மனிதன் கடவுளுக்காக எழுப்பிய கோவில்கள் பல உண்டு. ஆனால் கடவுளே தனக்காக எழுப்பிக் கொண்ட கோவில் ஒன்றும் உண்டு. அதுவே மனிதனின் இதயம். அதுவே எல்லாக் கோவில்களிலும் அழகான கோவில். ஆகவே நர யஜ்ஞம் என்னும் மானுட சேவை, கலிகாலத்தில் தெய்வ வழிபாட்டுக்குச் சமமானது. ஸ்ரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் மக்கள் சேவையே மகேசன் சேவை; ஜீவ சேவையே சிவசேவை; நர சேவையே நாராயண சேவை; ஊருக்குழைத்திடல் யோகம் (இறை வழிபாடு என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். நர யஜ்ஞத்தின் இன்னொரு பகுதி தான் அதிதியஜ்ஞம் என்னும் விருந்தோம்பும் பண்பாடு, விருந்தினர் வீட்டுக்கு வந்தால் அவரை இறைவனாகவே நினைத்து உபசரிக்க வேண்டும் என்று வேதம் கூறுகின்றது. வள்ளுவப் பெருமானும் திருமண வாழ்க்கையின் லட்சியமே விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார்.
“இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு"
"வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்." தொடர்ந்து விருந்தினரை உபசரிக்கும் குடும்பத்தில் புண்ணியம் பெருகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு''
"வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.''
வீட்டில் விருந்தினர் வந்தால் அவருக்காகவாவது சின்னஞ்சிறு பூசல்களை மறந்து வீட்டில் உள்ளோர் எல்லோரும் இன்முகத்துடன் அவரை வரவேற்போம். வீட்டுக்கு விருந்தினர் வருவதே குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குத் தான். இதனால் தான் தெய்வீக நூல்கள் ஆகிய திருக்குறளும், பெரிய புராணமும், விருந்தினரை உபசரிக்கும் பண்பைப் புகழ்ந்து பேசுகின்றன. ஒரு ஊரில் அம்மிநாதன் என்ற கணவனும், குழவி அம்மாள் என்ற மனைவியும் இருந்தனர்.
அவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அக்கம் பக்கத்தவர் டி.வி பார்ப்பதை விட்டுவிட்டு இவர்கள் சண்டை போடுவதையே வேடிக்கை பார்ப்பார்கள். ஒருநாள் கணவன், மனைவி சண்டை உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம் பார்த்து விருந்தினர் வீராசாமி வீட்டுக்குள் நுழைந்தார். கணவரும், மனைவியும் தர்மசங்கடத்தில் நெளிந்தார்கள். கையில் இருந்த போர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விருந்தினரை உபசரிக்க இருவரும் தலைப்பட்டனர். சிற்றுண்டியும், காப்பியும் கொடுத்து உபசரித்தனர். அவர் இவர்களை நலம் விசாரித்து விட்டு, வாழ்த்தி விட்டு புறப்பட்டு போனார். அம்மிநாதனும், குழவி அம்மாளும் போராட்டத்தை மறுபடியும் தொடங்க இருந்தனர். அச்சமயம் பார்த்து அடுத்த விருந்தினர் அப்பாசாமி உள்ளே நுழைந்தார். மறுபடியும் கணவனும், மனைவியும் பூசல்களுக்கு சற்று போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு அப்பாசாமியை உபசரித்தனர். அவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இப்படி இரண்டுமணி நேரம் கழிந்தது. கணவன் மனைவிக்கு தாங்கள் எதற்காகச் சண்டை போட்டோம் என்பதே மறந்து விட்டது. தங்கள் அசட்டுத்தனத்தை எண்ணி இருவரும் சிரித்துக் கொண்டனர். இரண்டு மணிநேரம் கூட
தாங்காத சின்னச் சண்டையைப் போய் பெரிதுபடுத்தினோமே என்று அவர்களுக்கு
அவமானமாக இருந்தது. வீட்டுக்கு விருந்தினர் வருவதே நம்முடைய அற்பச் சண்டைகளில் இருந்து நம் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான். இதனால் தான் வேதமும், அதிதி தேவோ பவ என்று கூறுகிறது. விருந்தினரைத் தெய்வமாக வணங்கு என்கிறது.
கருத்துகள் இல்லை