குலதெய்வ வழிபாடு தேவ யஜ்ஞம் How To Gain Goddess Worshippers
குலதெய்வ வழிபாடு
தேவ யஜ்ஞம் How To Gain Goddess Worshippers
தேவ யஜ்ஞம் How To Gain Goddess Worshippers ஆலயம் தொழுவது சாலவும் நன்று, குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க அறநூல்கள் கூறும் அடுத்த வழி குலதெய்வ வழிபாடு ஆகும். இது தேவயஜ்ஞம் ஆகும். வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் குலதெய்வமோ எந்தக் குலத்தில் நாம் பிறப்போம் என்று நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. குலதெய்வ வழிபாட்டினால் நம்முடைய மூதாதையர்களோடும், உறவினர்களோடும் நாம் தெய்வமயமாகப் பிணைக்கப்படுகிறோம்.
பெரும்பாலும் குலதெய்வமாக எது இருக்கும் தெரியுமா? நம்முடைய மூதாதையர்களில் ஒருவர் தெய்வத்தை தரிசனம் செய்து இருப்பார். அந்த தெய்வமே நம் குல தெய்வமாக அமைவது உண்டு. நம் குடும்பத்தில் முன்னோர் ஒருவர் ஆத்ம ஞானியாக விளங்கி இருப்பார். ஞானி என்பவர் இறைவனே ஆவார் என்பது பகவத்கீதையில் கண்ணபிரான் கூறியது ஆகும். அவரே குலதெய்வம் ஆகிவிடுவார். நம் குடும்பத்தில் யாரேனும் பொதுப்பணிக்காக உயிரை விட்டிருந்தாலும், பெண்களின் கற்பைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்திருந்தாலும் அவர்களையும் குலதெய்வமாகக் கொள்வது உண்டு.
தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக உயிர் துறந்த பெண்களையும் குலதெய்வமாகக் கொள்வது உண்டு. குலதெய்வ பக்தி வாழ்க்கையில் நல்ல பிடிப்பைத் தரும். துன்பம் வருகின்ற போதும், இன்பம் வரும்போது அதனால் கர்வம் அதிகமாகாமலும், குலதெய்வம் நம்மைக் காக்கும். தென் தமிழகத்தில் பொதுவாக பங்குனி உத்திரம் நாளன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள். பிழைப்புக்காக ஊரை விட்டு வெகுதூரம் சென்றவர்களும் கூட குலதெய்வக் கோவில் திருவிழாவுக்கும், வழிபாட்டுக்கும் தங்கள் ஊருக்குத் திரும்பி வருவார்கள். வீட்டில் திருமணம், புதுவீடு புகுதல் போன்ற மங்களகரமான விழாக்களிலும் குலதெய்வத்தை முன்னே வைத்துத் தான் நற்செயல்களைச் செய்வார்கள். நீண்ட காசி யாத்திரை போன்ற புனித யாத்திரைகளையும் செய்யும் போதும், யாத்திரை துவங்கும் முன்னும், யாத்திரை முடிந்த பிறகும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
இன்னும் பலர் தங்களுடைய ஆட்டோ ரிக்ஷா, மோட்டார் கார் இவற்றிலும் குலதெய்வத்தின் பெயரைத் தங்கள் பாதுகாப்புக்காக எழுதி வைத்திருப்பதை ஆயிரக்கணக்கான வண்டிகளில் பார்க்கலாம். திருமணப் பத்திரிக்கைகளில் குலதெய்வத்தின் பெயரை அச்சிடுவது இன்றியமையாதது ஆகும். குடும்பத்தில் மூத்த குழந்தைக்கு குலதெய்வத்தின் பெயரையும் சேர்த்து வைப்பது பாரதம் முழுவதிலும் காணப்படும் வழக்கம் ஆகும். ஸ்ரீராமகிருஷ்ணரின் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும் குலதெய்வம் ஆகிய ராமனின் பெயர் இணைந்திருப்பது நோக்கத்தக்கது.குழந்தைகள் நல்வாழ்வில் குலதெய்வத்தின் பங்கு இன்றியமையாதது ஆகும். தங்கள் குழந்தைக்கு குலதெய்வக் கோவிலில் முதல் மொட்டை போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெற்றோர்கள் பலப்பலர். குழந்தைகளுக்கு முதற்கவளம் சோறு ஊட்டுவது அன்னப்பிராசனம் எனப்படும்.
அது குலதெய்வக் கோவிலில் வைத்தே நடைபெறும். மேலும் குழந்தைக்கு காது குத்துவது, எழுத்தறிவிப்பது (அக்ஷராப்யாசம்) ஆகியவற்றை குலதெய்வத்தின் கோவிலில் வைத்தே நடத்துவார்கள். பல்வேறு ஜாதியினருக்கும் ஒரே குலதெய்வம் இருப்பது உண்டு. வள்ளியூரை அடுத்த சித்தூர் தென்கரை மகாராஜன், ஐயப்பன், மாரியம்மன், சுடலைமாடன் முதலிய தெய்வங்கள் பல ஜாதியினருக்கும் குலதெய்வமாக விளங்கி வருவது சமுதாய ஒற்றுமைக்கு நல்லமுறையில் வழிவகுப்பது ஆகும். பெரிய அளவில் கூட்டமாகக் குடிபெயர்ந்தவர்கள் தங்களுடைய குலதெய்வக் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு போய் தான் வாழும் ஊரிலேயே குலதெய்வக் கோவில் அமைத்துக் கொள்வது உண்டு. திருநெல்வேல் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர் போய் வாழும் குடும்பத்தினர் சீவலப்பேரி சுடலையிடம் இருந்து பிடிமண் எடுத்துப் போய் புதிய ஊரில் கோவில் அமைத்துக் கொள்வார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் பிருந்தாவனத்தில் இருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு வந்து தக்ஷிணேஸ்வரத்துக் கோவிலின் அருகில் பரப்பிக் கொண்டார். இந்த இடமும் பிருந்தாவனமாகவே ஆகிவிட்டது என்று கூறினார்.
குலதெய்வ வழிபாட்டினால் குடும்ப ஒற்றுமை சிறப்பதால் பல்வேறு கொள்கைகளை உடையவர்களும், நாத்திகர்களும் நிறையப் படித்த விஞ்ஞானிகளும், வேதாந்திகளும் கூட குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் பின்பற்றுகிறார்கள். தம் குடும்பத்திற்குப் பெரிய பாதுகாப்பு அரணாகக் குலதெய்வ வழிபாடு விளங்குகிறது.
தெய்வங்களை நாம் தேர்ந்தெடுத்து வழிபடுகின்றோம். குலதெய்வமோ எந்தக் குலத்தில் நாம் பிறப்போம் என்று நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. குலதெய்வ வழிபாடு தேவயஜ்ஞத்தில் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு கடினமான விரதங்களையும் ஏற்று நடத்த, மனஉறுதியை, குலதெய்வ வழிபாடுபோல் வேறெந்த வழிபாடும் நமக்கு அருள்புரிவதில்லை . அலகுகுத்துதல், தீச்சட்டி ஏந்துதல், தீக்குழி இறங்குதல், காது குத்துதல், அலகுக்காவடி எடுத்தல் முதலிய பல கடின வழிபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்தியை நமக்கு குலவழிபாடு தருகிறது. டெல்லி பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ. மாணவர்கட்கு, மனஉறுதி பெறுதல், நெருக்கடிகளைச் சமாளித்தல் ஆகியவற்றில் பயிற்சிதர பூக்குழி இறங்குவதையே ஒரு விருப்பப்பாடமாக வைத்துள்ளனர்.
கரூர் அருகே மேட்டுமகாதனபுரம் மகாலெட்சுமி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தேங்காயை கல்லில் உடைக்காமல் தலையில் உடைத்துக்கொள்கின்றனர். தலைக்கு எவ்வித சேதமும் ஏற்படுவதில்லை . 3.08.2008 அன்று 515 பேர் தம் தலையில் தேங்காய் உடைத்து தம் குலதெய்வ பக்தியை நிலைநாட்டியுள்ளனர். முன்பொரு காலத்தில், இந்தப் பக்தர்களின் தீவிர பக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பிய வெள்ளைக்கார துரை ஒருவன் கல்லை தேங்காய் போல் வடிவம் செய்து அங்கே வைத்துவிட்டான். பக்தி வேகத்தில் பக்தர் ஒருவர் கல்தேங்காயைத் தன் தலையில் உடைத்துத் துண்டாக்கிவிட்டார். பக்திக்குச் சான்றாக இக்கோயிலில் இப்போதும் அந்த உடைந்த கல்தேங்காயை கண்ணாடிப் பெட்டியில் காட்சிப்பொருளாக வைத்துள்ளார்கள். குலதெய்வ வழிபாடு எந்த ஒரு துன்பத்தையும் போக்கவும், தாங்கிக் கொண்டு வெளிவரவும் நமக்குத் தெம்பூட்டும்.
பிரம்ம யஜ்ஞம் (நன்னூல் ஓதுதல்) :
குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்க அறநூல்கள் கூறும் அடுத்த வழி பிரம்ம யஜ்ஞம் எனப்படும். இது நன்னூல் ஓதுவதைக் குறிக்கும். பல குடும்பங்களில் தலைமுறை, தலைமுறையாக ஏதாவது துதிப்பாடலைப் படித்து வருவார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பல தலைமுறைகள் ஓதி வரும் குடும்பங்கள் பல உண்டு. அகிலத்திரட்டு நூலைக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக ஓதி வந்துள்ளதை கிராமங்களில் பார்க்கலாம். ராமாயண நூலை பல தலைமுறைகள் ஓதி வந்துள்ள குடும்பங்களில் சம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் கூட வால்மீகி ராமாயண புத்தகத்தைப் பூஜை அறையில் வைத்து தினம் வணங்குபவர்கள் உண்டு.
அதுபோலவே பன்னிரு திருமுறைகளையும் ஓதியும், வழிபட்டும் வரும் குடும்பங்கள் உண்டு. இவை குடும்ப ஒற்றுமைக்கு அடிகோலி அந்நூற்களை எழுதிய மகான்களுடன் நம்மை இணைக்கும். அந்நூலில் பேசப்படும் தெய்வ வடிவுடன் நம்மைப் பிணைக்கும். பல குடும்பங்களில் பொருள் தெரிந்தோ, தெரியாமலோ பக்தியுடன் விஷ்ணு சஹஸ்ர நாமம், பகவத் கீதை, கந்தசஷ்டி கவசம், வினாயகர் அகவல், குலதெய்வத்தைத் துதிக்கும்
பாடல்கள் இவற்றை மக்கள் ஓதி வருவதைப் பார்க்கலாம். மெள்ள மெள்ள அந்நூல் கூறும் நன்னெறிகளும், தெய்வ பக்தியும் நம் நெஞ்சில் ஊற இந்த நன்னூல் உதவுகின்றது.
பண்டிதர் குண்டோதரசாமி மன்னன் வாணிதாசனின் அவைக்கு வந்தான். மன்னரே உங்கள் அவையில் பாகவதக்கதை ஒருநாள் சொல்கிறேன். எனக்கு வயிற்றுப்பிழைப்புக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்று கேட்டார்.
மன்னன் வாணிதாசன் புலவரே, பிறருக்கு உபதேசம் பன்ணும் முன் நீங்களே பாகவதக்கதையை இன்னும் நன்கு படித்துப்பாருங்கள் என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டான்.
ஓராண்டுகாலம் பண்டிதர் குண்டோதரசாமி பாகவதம் படித்தார். மறுபடியும் மன்னனின் அவைக்கு வந்தார். மன்னவா! கதை சொல்ல நான் தயார்! கதைகேட்க நீங்கள் தயாரா? என்று கேட்டார்.
புலவரே நீங்கள் இன்னும் பாகவத நூலை ஆழ்ந்துபடியுங்கள் என்று மன்னர் அவரை திருப்பி அனுப்பிவிட்டான்.
இப்படிப் பலதடவை மன்னன் பண்டிதரைத் திருப்பித் திருப்பி அனுப்பினான். கடைசியில் பண்டிதர் பாகவத நூலைக் கசடறக் கற்றார். மகாலட்சுமியின்
கணவரும்,
உலகின் தலைவரும் ஆகிய பகவானைத் துதிபாடுவதை விட்டு, மன்னனிடம் போய்ப் பிச்சைக் காசுக்குக் கையேந்தி நின்றோமே என்று வெட்கம் அடைந்தார்.
மன்னனுக்கு, பண்டிதர் தகவல் சொல்லி அனுப்பினார்.
வாணிதாசரே! நான் செல்வக்குமாரனாகிய திருமாலை வழிபடுபவன். புறப்பொருளை நாடமாட்டேன். எனக்கு நன்னூல் ஓதி அதன் மையக்கருத்தை, பகவதிபக்தியை உணர்த்திய தங்கட்கு நன்றி. குசேலரைப்போன்ற இறையன்பே பண்டிதர் குண்டோதரருக்கு அனைத்து நன்மைகளையும் அளித்தது.
'கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்' கல்வியின் பலன் கடவுள்பக்தியே.
இப்படி 1) பூத யஜ்ஞம், 2) நர யஜ்ஞம் - அதிதி யஜ்ஞம், 3) பித்ரு யஜ்ஞம், 4) தேவ யஜ்ஞம், 5) பிரம்ம யஜ்ஞம் ஆகிய உயிர் வழிபாடு, மனிதநேயம் - விருந்தோம்புதல், மூதாதையர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நன்னூல் ஓதுதல் ஆகியவை குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு அடையாளத்தையும், பெருமிதத்தையும், ஒற்றுமையையும் தரவல்லது.
கருத்துகள் இல்லை