பற்களைக் காக்கும் முறைகள் Simple Guidance For You In Teeth Protection.
பற்களைக் காக்கும் முறைகள் Simple Guidance For You In Teeth Protection.
எத்தனையோ வித விதமான பற்பசைகள் பல்துலக்க வந்த போதிலும் பல்வலி, பல் ஈறுபிணி இவைகளினால் அவதியுற்று கொண்டுதான் நாம் இருக்கின்றோம். பல கிராமங்களில் மூலிகைகளின் குச்சிகளையே பற்துலக்கப் பயன்படுத்தி வருகின்றனர். நம்மிடையே 60 வயதை தாண்டியவர்கள் அழகான பற்களை கொண்டிருப்பர். ஆனால் 6வயதை தாண்டியவர்கள் பற்சொத்தை, பல்வலி, கூச்சம் என்றிருப்பர். காரணம் முறையற்ற முறையில் நாம் பற்களை தேய்த்து பராமரிப்பது தான் ஆகும். சித்த மருத்துவத்தில் பற்துலக்க துவர்ப்பு, கசப்பு, எரிப்பு சுவையுள்ள பல்வேறு மூலிகைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் அசோகு, வேம்பு, ஆத்தி, ஆல், இத்தி, எருக்கு கடம்பு, கருங்காலி, குறுக்கத்தி, செண்பகம், நாவல், நாயுருவி, பூலா, மகிழ், மருது, மா, விளா, வேல் நொச்சி, பெருங்குமிழ், பெருவாகை இவற்றின் பட்டையை பொடியாகவோ அல்லது தனி குச்சியைக் கொண்டோ பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பயன்படுத்தும் முறை:
மேற்கண்ட மூலிகைகளின் குச்சியின் முனையை நன்றாய் மிருதுவாய் நசுக்கி, நன்கு தட்டி, பல்லின் ஈறுகள், துன்புறாவண்ணம் அதிகாலையில் பற்களை துலக்க வேண்டும். பற்களைத் துலக்கியப்பின் வயல்வெளி, நீருள்ள இடம் எங்கும் காணும் கரிப்பான் எனும் கரிசாலை மூலிகையின் இலையை நன்கு மென்று அதன்சாறு சிறிது உள்ளே போகும்படி பற்களில் தேய்த்து வாயலம்பிக் கொள்ள வேண்டும். கரிப்பான் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பதினாறு முறை வாய் கொப்புளிக்க வேண்டும். அப்போது பற்களின் இடுக்குகளிலுள்ள மலினங்கள் போகும். பற்களை தேய்க்கும் போது உண்டாகும் சூட்டைக் குறைக்கும். ஈறுகளிலுள்ள தாபிதத்தை நீக்கும். உடல் சூடும் குறையும்.
நன்மைகள் :
1) கருவேலங்குச்சி அல்லது பட்டைப் பொடியை பயன்படுத்தும்
போது பல் இறுகும். (வேலுக்குப் பல்லிறுகும்).
2) வேப்பங்குச்சியை பயன்படுத்தும் போது பல் துலங்கும்,
மஞ்சள் கறை அகற்றி வெண்ணிறத்தில் காணும் (வேம்புக்கு
பற்துலங்கும்)
3) பூலாங்குச்சியை பயன்படுத்தும் போது போகச் சக்தியை
உண்டாக்கும் (பூலுக்கும் போகும் பொழியுங்காண்).
4.ஆலங்குச்சியை பயன்படுத்த இலட்சுமிகரத்தை
உண்டாக்கும்.நல் மனநிலையைஉண்டாக்கும்.
5) நாயுருவி வேர்குச்சியை பயன்படுத்தும் போது வசியச்
சக்தியை உண்டாக்கும்.
பல்துலக்கத்தகாத பொருட்கள் :
செங்கல் பொடி, மணல், அடுப்புக்கரி, வைக்கோல், முறை தவறிய சாம்பல், பட்டுப்போன மரங்களின் குச்சி, பட்டை ஆகியவைகளினால் பல் துலக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவீன ஆய்வுப்படி இவைகளை கொண்டு தேய்க்கும் போது பற்களின் மேற்பகுதி (எனாமல்) தேய்ந்து விடுவதும், பல் ஈறு பாதிப்பும் அடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குச்சியால் பல் துலக்காதவர்கள்:
அசீரணம், வாந்தி, ஆஸ்த்மா , பக்கவாதம், வாய்ப்புண், நாவறட்சி, கண்ணோய், காது நோய், மார்புவலி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் குச்சியினால் பல்துலக்கக் கூடாது. மேற்கண்ட நோய் உடையவர்கள் பற்களை துலக்க மூலிகைப் பொடிகளை தாமே தயார் செய்து பயன்படுத்தலாம். இரைப்பு (ஆஸ்த்மா ), காசம், கபநோய் உடையவர்கள், கரிசாலை, பிரப்பங்கிழங்கு, குப்பைமேனி, நொச்சி இலை, எருக்கிலை, கருங்காலிப்பட்டை இவைகளின் பொடியைப் பயன்படுத்தலாம். மேற்கண்ட மூலிகைகள் யாவும் கபநோயை குறைப்பதில் வல்லவை.
பித்த நோய் உடையவர்கள், வேம்பு, மருது, கருவேல், மாவிலங்கு இவைகளின் பட்டை, அரசிலை, எருக்கிலை, நொச்சி இலை, பல்வலிப்பூண்டு இவைகளின் பொடியைப் பயன்படுத்தலாம். இவைகள் யாவும் உடலின் உஷ்ணத்தைக் குறைக்க உதவுவதாகும்.
வாய்ப்புண், நாப்புண் உள்ளவர்கள், குப்பைமேனி, பிரமதண்டு, கருவேலம்பட்டை, நாவல்பட்டை, அரச வேர்ப்பட்டை இவைகளின் பொடியைப் பயன்படுத்தலாம்.
அசீரண நோயுள்ளவர்கள் மருதம் இலை, எருக்கிலைப் பொடியை பயன்படுத்தலாம். கல் நார் பொடியை யாரும் பயன்படுத்தலாம். அனைவரும் பயன்படுத்த கடுக்காய்ப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய் பொடி இம்மூன்றையும் ஒன்றாக சரிசமமாக கலந்து அவைகளை பயன்படுத்தி வரலாம்.
மேற்கண்ட மூலிகைகளை யாவும் நம் விஞ்ஞான முறைப்படி ஆய்ந்து பார்க்கும் போது அவைகள் யாவும் (Antispetic) ஆன்டிசெப்டிக், (Anti bacterial) ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் ஆக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கிருமிகளை தவிர்க்கவும் வழிவகை உள்ளது என்றும் கூறுகின்றனர்.
மேற்கண்ட பல்துலக்குதலை நாம் எடுத்துக் கொண்டால் சித்தர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானத்தைப் புகுத்தியுள்ளனர். பற்துலக்குவது பற்களுக்கு மட்டுமல்ல, உடலின் வாத, பித்த, கப நோய்களுக்கு மற்ற நோய்களுக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்கள். எனவே பற்துலக்குவது வெறும் பற்களுக்கு மட்டும் என்று நினைத்துவிடக் கூடாது.
மேற்கண்ட முறைகள் யாவும் நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடியதாகும். (பல், பல்ஈறு நோய்களுக்கு சித்தர்கள் தனிப்பெரும் மருத்துவத்தையே தனியாக கூறியுள்ளார்கள்).
எங்ஙனம் கடைப்பிடிக்கலாம்:
1) வேம்பு, கருவேல், நாயுருவிவேர் இவற்றின் குச்சிகளை வாரத்திற்கு
ஒருமுறை தேவையானதை மட்டும் விடுமுறை நாளில் சேகரித்து நன்கு வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
2) பற்துலக்குவதற்கு என்று குறைந்தது 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். பல வேலைகள் இருந்தாலும். வாய்க்கொப்பளிப்பது
முதல் 16 தடவை நீரினால் கொப்பளிக்க வேண்டும்.
3. வீட்டுத் தோட்டத்தில் அழகுச் செடிகள் வளர்ப்பது போன்று கரிசாலை, குப்பைமேனி, நொச்சி இலை இவைகளை ஒரு சிறிய இடத்திலாவது வளர்த்து வரலாம். இதை தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
4.பல் துலக்குவதை ஒரு ஸ்டைலாக நினைக்கக் கூடாது. பல்துலக்குவதின் மூலம் பல நோய்கள் வராமல் இருக்க வழியுள்ளன என்று சிறிய குழந்தைகள் முதல் அனைவருக்கும் இதை தெரிவிக்க வேண்டும்.
5) வீட்டின், தாய், தந்தையர்கள் இதற்கு முன்னுதாரணமாக இருந்து தம்முடையச் சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதனால் பொருட் செலவும் மிச்சப்படுகிறது.
6) மேற்கண்ட முறைகள் யாவும் குறிப்பாக எளிதில் தினசரி
கடைப்பிடிக்கக் கூடிய ஒன்றாகும். எதிர்காலத்தில் உங்கள் பற்கள் சிறப்புற அமைய வேண்டுமானால் இப்போதே தயாராகுங்கள் "பல் போனால் சொல்போச்சு” - இது பழமொழி. ஆனால் "பல் போனால் உடலே போச்சு” என்பது தான் உண்மையான பொருளாகும். "பல் துலக்குதலும் ஒரு சிகிச்சை முறை” என்பதை உணருங்கள் .
ஆக அன்றைய சித்தர்களின் பல் மருத்துவத்தின் மீதான விஞ்ஞானத்தை பாருங்கள். தினசரி வாழ்வில் மனிதன் எங்கனம் இருக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள். அதன்படி நாமும் பின்பற்றி புதிய சமுதாயம் ஆரோக்கியமானதாக படைப்போம்.
கருத்துகள் இல்லை